முஸ்லிம்களும் புவியியல் துறைக்கான அவர்களின் பங்களிப்புக்களும்
தொடர்-01
மனிதன் அறிவியலின் முதற்படியாக தனது மானத்தை இலை குழைகளால் மறைக்க சிந்தித்தவன் பிறகு உணவு, உடை மற்றும் உறையுள் என்ற அத்தியவசியமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டான். பின்னர் கற்கள் இரண்டினை உரசி நெருப்பை மூட்டி பச்சை உணவை வெதுப்பி உண்ணல், சக்கரங்களை உருவக்கி வேலைகளை இலகுவாக்கல், எண்ணுவதற்கு பழகிக்கொள்ளல், தொடர்பாடல் ஊடகமாக மொழியை உருவாக்குதல் என நாளாந்த செயற்பாடுகளுடன் சிந்தனா ரீதியான ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டான். பின்னர் தன்னோடு படைக்கப்பட்டுள்ள படைப்பினங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் வேலையை இலகு படுத்தவும் நேரத்தை சுருக்கிக்கொள்ளவும் பழகிக்கொண்டான். பின்னர் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற காரணங்களுக்காக ஆற்றுவடி நிலங்களை சார்ந்து தனக்கே உரிய சமூகக்கட்டமைப்போடு வசிக்கத்தொடங்கி, நாகரிகம் தோன்றுவதற்கான அடித்தளத்தை இடத்தொடங்கினான். நாகரிகத்தின் படிமுறை வளர்ச்சியோடு அறிவு, ஆராய்ச்சி முயற்சிகளும் சமாந்தரமாக வளரத்தொடங்கின. காலப்போக்கில் அவனது சிந்தனைகளும், முடுவுகளும் அறிவியற் கலையாக தோற்றம் பெற்றன.
உலகில் வளங்கள் பரம்பியுள்ள பிரதேசங்களை நோக்கி குடியேற்றங்களை நிறுவ வேண்டிய நிலையில் அவனுக்கு தரைத்தோற்றங்கள், நிலவமைப்புக்கள், கால நிலை வேறுபாடுகள் என்பன தொடர்பான அறிவுகளை சூழலை அவதானிப்பதன் மூலம் பெற்றுக்கொண்டனர். இவ்வவதானிப்புக்களும், முடிவுகளுமே உலகில் புவியியற் கலை வளர்வதற்கு பிரதான காரணமாக அமைந்தது. அனைத்து விஞ்ஞானங்களை விடவும் புவியியல் தொன்மை வாய்ந்த கலையாக கருதப்படுகிறது.. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பாபிலோனியர், யூதர், கிரேக்கர் போன்றோர் புவியியலை பற்றி அறிந்திருந்தனர். ஆரம்ப கால புவியியலில் கிரேக்கர்கள் தனது பங்களிப்பை செழுத்தியிருந்தனர். எனினும் மத்திய காலப்பிரிவில் அரேபியர்களது புவியியலுக்கான பங்களிப்பானது வரலாற்றில் மகத்தானதாக கொள்ளப்படுகிறது. கிரேக்கர்கலது புராதன அறிவியலானது அரேபியாவிலிருந்து குடிபெயர்ந்த பபிலோனியர்களிடமிருந்தே பெறப்பட்டது. ஆகவே அராபியர்கள் தமது மூததையர்களின் அறிவுச்சொத்தையே ஐரோப்பிய சமூகத்திற்கு விட்டு சென்றிருந்தனர். அவர்களிடமிருந்தே கிரேக்கர்கள் ஒரு முறை கடனாக பெற்றிருந்தனர். ஆரம்ப காலத்தில் புவியியலானது ஒன்றோடொன்று பிணைந்த மூன்று நடவடிக்கைகளால் வளர்ச்சி கண்டது.
1.புதிய பிரதேசங்களை கண்டறிவதற்கான தரை வழி, நீர் வழிப்பயணங்கள்.
2.கண்டறியப்பட்ட பிரதேசங்களை பு றவரிப்படங்களாக வரைதல்.
3.திரட்டப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்தல்.
பெரும்பாலான நாகரிகங்கள் முதலிரண்டு நடவடிக்கைகளிலே கூடிய கவனம் செலுத்தினர். பெரும்பாலும் கிரேக்கர்கள் தகவல்களை பகுப்பாய்வு செய்வதிலே கூடுதல் ஆர்வம் காட்டினர். இதனால் கிரேக்கர்கள் புவியியலை பௌதிகப்புவியியல், கணிதவியற் புவியியல், தாவரப்புவியியல், மானிடப்புவியல் என்றும் புவியியலின் உப பிரிவுகளாக வகைப்படுத்தி புத்தகங்களை எழுதத்தொடங்கினர்.
பின்வந்த காலப்பகுதிகளில் கிரேக்கர்கள் உரோமர்களால் வெற்றி கொள்ளப்பட்டதன் மூலம் கிரேக்கர்களின் அறிவிப்பாரம்பரியம் வீழ்ச்சி கண்டது. அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு தேக்கநிலை காணப்பட்டது. பெரும்பாலும் உரோமர்கள் நாடுகளை கைப்பற்றுவதிலும், போர்கள் செய்வதிலும், பொருளாதார துறையை விருத்தி செய்வதிலுமே அதிக கவனம் செலுத்தினர். அவர்கள் கிரேக்கர்களை போன்று தத்துவ ரீதியிலான சிந்தனைகளில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. குறிப்பாக பயணக்கட்டுரைகளை( Itineraries ) எழுதுவதிலும், இடவிளக்க அகராதிகள் ( Topographical Dictionaries ) தொகுப்பதிலுமே விரல்விட்டு எண்ணக்கூடிய அறிஞர்கள் ஈடுபட்டனர். இவர்களுள் இருவர்மட்டுமே முதன்மையான இடத்தை பெறுகின்றனர். முதலாமவர் ஸ்டர்ரேபோ (கி.மு 63 - கி.பி 36) இவர் புவியியலை ஏழு பாகங்களாக தொகுத்தார் மேலும் உரோம இராஜ்யம் தொடக்கம் எதியோப்பியாவின் எல்லை வரை சென்று தகவல்களை சேகரித்தார். இரன்டாமவர் தொலமி இவர் ஒரு கணித புவியலளர் ( Geographike Syntaxis ) என்பது இவரது மகத்தான ஆக்கமாகும். காலவோட்டத்தில் உரோமனிய ராஜ்யத்தின் கீழ் கிரேக்க கலாச்சாரம் கடுமையான பதிப்புக்குட்பட்டது. இக்காலப் பகுதியிலேதான் கிரேக்க தத்துவாந்த சிந்தனைகளுக்கும் யூதம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கும் இடையிலான நாகரிக மோதல்கலானது அறிவியல் வளர்ச்சியிலே ஒரு முடக்க நிலையை தோற்றுவித்தது. மேலும் இக்காலப்பகுதியில் தோன்றிய கருத்துக்கள் ஒரு சாராரை திருப்திப்படுத்துவதக அமைந்ததே அன்றி அறிவூட்டுவதாக இருக்கவில்லை.
தொடரும்...........
ஆக்கம் : KMM ஹிகம்
No comments:
Post a Comment